சிலைகளுக்கான தொல்லியல் ஆய்வு மையத்தை சுவாமிமலைக்கு மாற்ற வேண்டும்: உலோகச் சிற்பக் கலைஞர்கள் சங்கம் கோரிக்கை

சென்னையில் செயல்பட்டு வரும் சிலைகளுக்கான இந்திய தொல்லியல் ஆய்வு மையத்தை, சுவாமிமலைக்கு மாற்ற வேண்டும் என ஐம்பொன் சிற்பக் கலைஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சுவாமிமலையில், ஐம்பொன் உலோகச் சிற்ப வேலைப்பாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களில் 25-க்கும் அதிகமான சிலைச் சிற்பிகள், விசேஷ நாள்கள் மட்டுமின்றி தினசரி வெளிநாடுகளுக்கு சிலைகள் அனுப்பி வருகின்றனர். இங்கு தயாராகும் சிலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தொல்லியல் ஆய்வு மையத்தில் இருந்து சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன்பு பழமையான சிலை வடிவமைப்புகளுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பளபளப்பாக பளபளப்பாக்கப்பட்ட ஐம்பொன் சிலைகளுக்கும் சான்றிதழ் பெறுவது அவசியமாகி விட்டது.

இதனால், சுவாமிமலையிலிருந்து சென்னைக்கு சென்று சான்றிதழ் பெறுவதில் பயணச்செலவு, தங்கும் வசதி உள்ளிட்ட கூடுதல் சுமைகள் ஏற்படுகின்றன. அதோடு, வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் தாமதமும் ஏற்படுகிறது என சிற்பிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, சிலைகளுக்கான சான்றிதழ் வழங்கும் பழைய நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும், சென்னையில் உள்ள தொல்லியல் ஆய்வு மையத்தை சுவாமிமலைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து சுவாமிமலை உலோகச் சிற்பக் கலைஞர் நலச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் எஸ். சுரேஷ் கூறியதாவது:

“சுவாமிமலையிலிருந்து மாதம் 100-க்கும் மேற்பட்ட சிலைகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. முந்தைய காலங்களில் பழமையான சிலை வடிவமைப்புகளுக்கே சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், கோவில் சிலைத் திருட்டுச் சம்பவங்களின் காரணமாக தற்போது பளபளப்பாக்கப்பட்ட சிலைகளுக்கும் சான்றிதழ் பெறுவது கட்டாயமாகியுள்ளது.

சென்னைக்கு அனுப்பப்படும் சிலைகளை, டெல்லியில் இருந்து அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து, சிற்பிகளிடம் விசாரித்து சான்றிதழ் வழங்குகின்றனர். ஆனால் குறைந்த எண்ணிக்கையில் சிலைகள் இருந்தால் அவர்கள் வருவதில்லை. அதிக அளவு இருந்தால் மட்டுமே வருவார்கள். இதனால் குறைந்தது 5 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக, பெரிய சிலைகளை பேக்கிங் செய்து சென்னைக்கு கொண்டு சென்று திரும்புவதில் கூலி, போக்குவரத்து, உணவு, தங்குமிடம் போன்ற செலவுகள் அதிகரித்து, லாபம் குறைந்து வருகிறது. மேலும், சிலை தயாரிக்கும் காலத்தில் மூலப்பொருட்களின் விலை உயர்ந்தால் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் தொகை கேட்க முடியாமல் அவர்கள் அதிருப்தியடைகின்றனர். இதனால் மீண்டும் ஆர்டர்கள் தராமல் போகிறது.

எனவே, சுவாமிமலைச் சிற்பிகளின் சிரமங்களையும், அவர்களது தேவைகளையும் கருத்தில் கொண்டு, தற்போது சென்னையில் உள்ள சிலைகளுக்கான தொல்லியல் ஆய்வு மையத்தை மத்திய அரசு விரைவாக சுவாமிமலைக்கு மாற்ற வேண்டும்” என தெரிவித்தார்.

Facebook Comments Box