புதிய தீயணைப்பு ஆணையத்துக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார் சங்கர் ஜிவால்
தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால், வரும் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். சுமார் 35 ஆண்டுகள் காவல்துறையில் சேவை ஆற்றி அனுபவம் பெற்றுள்ள அவரின் திறமையை மாநில அரசு பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி, காவல்துறை ஆணையம் போல, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைத்துறைக்காக புதிய தீயணைப்பு ஆணையம் ஒன்றை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அடிக்கடி ஏற்படும் பட்டாசு விபத்துகள், பேரழிவு தீ விபத்துகள் காரணமாக பெரும் உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் நேர்ந்துள்ளதால், அவற்றை தடுக்கும் வழிமுறைகளை இந்த ஆணையம் பரிந்துரைக்க உள்ளது.
மேலும், தீயணைப்பு துறைக்கு தேவையான நவீன உபகரணங்கள், கருவிகள் வாங்குதல் மற்றும் அவற்றை காலத்துக்கு ஏற்ப மேம்படுத்துதல் குறித்த ஆலோசனைகளையும் இந்த ஆணையம் வழங்கும். இதன் மூலம், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் செயல்திறன் மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.