அரசு சார்பில் ‘சென்னை இதழியல் நிறுவனம்’ – முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையின் கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனம் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்டது.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இதழியல் துறையில் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஊடகக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், தரமான கல்வியை வழங்கக் கூடிய முதன்மை கல்வி நிலையம் ஒன்றை தொடங்குவது என மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த கல்வியாண்டு (2025–26) முதல் செயல்படுவதற்காக ரூ.7.75 கோடி செலவில் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தில் ஒரு ஆண்டு கால இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட உள்ளது. அச்சு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகத் துறைகளில் திறமைகளை வளர்க்கும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தை தொடங்கி வைத்த பிறகு, முதலாமாண்டு மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், மா. சுப்பிரமணியன், செய்தித்துறை செயலர் வே. ராஜாராமன், சிறப்பு பணி அலுவலர் எஸ்.ஏ. ராமன், இயக்குநர் இரா. வைத்திநாதன், நிர்வாகக் குழுத் தலைவர் என். ரவி, தலைமை இயக்குநர் ஏ.எஸ். பன்னீர்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.