மேட்டூர் அனல் மின் நிலைய உலர் சாம்பல் விற்பனை முறைகேடு – விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இலவசமாக வழங்கப்படும் உலர் சாம்பலை, வெளிச்சந்தையில் அதிக விலையில் விற்றதாக வந்த புகாரைச் சேர்ந்த விவகாரத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்துக்குச் சொந்தமான திருவள்ளூர், தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட ஐந்து அனல் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் உலர் சாம்பலின் 10% சிறு மற்றும் குறுநிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ளவை வணிக நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன.

ஆனால், சேலம் அனல் மின் நிலையத்தில் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டிய உலர் சாம்பல், சட்டவிரோதமாக “முத்துகுமார் டிரேடர்ஸ்” என்ற தனியார் நிறுவனத்துக்கே கொடுக்கப்பட்டு, அந்த நிறுவனம் வெளிச்சந்தையில் அதிக விலையில் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், 2025 ஜனவரி 31 அன்று TANGEDCO இயக்குநரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர் கூறிய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்ததா என்பதைச் சார்ந்த ஆவணங்களுடன், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநர் நேரில் ஆஜராக வேண்டும் என முன்பே உத்தரவிட்டது.

இன்று (26.08.2025) தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் கோவிந்த ராவ் ஆஜராகி, உலர் சாம்பல் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, ஜனவரியில் அளிக்கப்பட்ட புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், தினசரி ஐந்துக்கும் மேற்பட்ட புகார்கள் வருவதாகவும், ஆனால், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, மனுதாரரின் புகாரை விசாரிக்க மூவர் குழு அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

நீதிபதிகள், இலவசமாக வழங்கப்பட்ட உலர் சாம்பல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக உள்ள குற்றச்சாட்டை அந்தக் குழு விசாரித்து, அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Facebook Comments Box