‘கோவை மாஸ்டர் பிளான் 2041’ விஞ்ஞான ஊழலுக்கு வழி செய்வதாக: இபிஎஸ் குற்றச்சாட்டு

கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ல் நிலப்பரப்புகளை வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. விஞ்ஞான முறையில் ஊழலுக்கு வழி தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை மறுதயாரித்து புதிய கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ஐ வெளியிட வேண்டும்” என அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: “தமிழக அரசு அண்மையில் அறிவித்த கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ல் நிலப்பரப்புகளை வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது கோவை மக்களிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நகர ஊரமைப்பு மற்றும் உள்ளூர் திட்டக் குழுமம் தயாரித்த கோவை மாவட்ட மாஸ்டர் பிளான் 2041-ல் பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில், கோவை மாநகராட்சியுடன் 4 நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 66 கிராம ஊராட்சிகள் ஆகியவை சேர்ந்து சுமார் 1531 சதுர கிமீ அளவுக்குப் புதிய மாஸ்டர் பிளான் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாஸ்டர் பிளான் உருவாக்கத்தில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு முழுமையாக நடத்தப்படவில்லை; கூட்டத்தில் கருத்து வேறுபாடுகள் மற்றும் சலசலப்பு ஏற்பட்டதால், கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பல்வேறு குளறுபடிகளைக் கொண்ட மாஸ்டர் பிளான் வெளியிடப்பட்டது.

ஏற்கெனவே, குடியிருப்பு நில வகைப்பாட்டில் உள்ள நிலங்களை விவசாயம் மற்றும் தொழில் பகுதிக்கு மாற்றியுள்ளனர். வளர்ந்த தொழில் நகரமான கோவையின் நகரப் பகுதியில் நில மதிப்பீட்டுத் தொகை அதிகரித்த நிலையில், நில மாற்ற அனுமதி வழங்குவது ஊழலுக்கு வழி செய்வதாகும் மற்றும் பல மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளதாக சந்தேகம் எழுகிறது.

நில வகைப்பாடு மாற்றத்தில் ஆளும் திமுக குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் நிறுவனம் மற்றும் குடும்ப உறவுகளுக்கு நெருக்கமான நிலங்கள், சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், குடியிருப்பு நில வகைப்பாட்டில் இருந்து மாற்றப்பட்டதாகக் கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்யாத திமுக அரசு, பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு இல்லாமல், திட்டமிடப்படாத கிராம பகுதிகளையும் சேர்த்து கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041 தயாரித்துள்ளது. குறிப்பிட்ட தரப்பினர் லாபம் ஈட்டும் வகையில் ஊழலுக்கு வழி ஏற்படுத்துவதுடன், அரசு சிறப்பாக செயல்படும் போல மாயத்தோற்றத்தை உருவாக்க இந்த மாஸ்டர் பிளான் பயன்படுத்தப்படுகிறது என்றும் கோவை மக்களிடையே பரவலாகப் பேசப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ன்படி நில வகைப்பாடு மாற்றங்கள் மூலம் சுமார் 50,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படலாம், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே, தற்போதைய கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ன் நகர ஊரமைப்புத் திட்டத்தில் இணைத்த பகுதிகளில் நில வகைப்பாடு மாற்றங்களை மறுதயாரித்து, பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தி, திருத்தங்களைச் செய்து புதிய கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041-ஐ வெளியிட இந்த திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box