மதுரை மாநகராட்சியில் உள்ள 3 லட்சத்திற்கும் மேலான கட்டிடங்களின் சொத்து வரி மதிப்பீட்டை மறுஆய்வு செய்ய ஒவ்வொரு வார்டிற்கும் ஒரு குழு வீதம், மொத்தம் 100 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கவுன்சிலர் ரவி தாக்கல் செய்த மனுவில், மாநகராட்சி சொத்து வரி விதிப்பில் முறைகேடு நடந்ததாக சிபிஐ விசாரணை கோரப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான சிறப்பு படைக்கு மாற்ற உத்தரவிட்டது. மேலும், கட்டிட வரி மதிப்பீட்டை மறு ஆய்வு செய்ய செயல் திட்டம் தாக்கல் செய்யுமாறு ஆணையிடப்பட்டது.

மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஏற்கெனவே 2022 ஏப்ரல் 1 முதல் மாநிலம் முழுவதும் சொத்து வரி மாற்றியமைக்கும் பணி நடந்து வருவதாகவும், மதுரை மாநகராட்சியில் 21,025 காலி இடங்கள், 13,384 குடியிருப்பு கட்டிடங்கள், 3,503 வணிக கட்டிடங்கள் மதிப்பீடு செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் வரி வருவாய் அதிகரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மீளாய்வில், பல குடியிருப்பு கட்டிடங்கள் வணிக, தொழிற்சாலையாக பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கேற்ற வரி விதிக்கப்படாமல் இருந்ததாகவும் கண்டறியப்பட்டதால், கோடிகளில் வருவாய் கூடுதல் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, நீதிமன்ற உத்தரவின்படி வரி வசூலாளர், தொழில்நுட்ப அலுவலர், சுகாதார மேற்பார்வையாளர் உள்ளிட்டோர் அடங்கிய 100 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை முதல் கட்டமாக சுமார் 66 ஆயிரம் கட்டிடங்களையும், இரண்டாம் கட்டமாக 1.96 லட்சம் கட்டிடங்களையும் மறுஆய்வு செய்ய உள்ளன. முழுமையான பணிக்குத் தேவையான கால அவகாசம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட இணைப்புகளின் தரவுகளும் சேகரிக்கப்படவுள்ளதாகவும், அதற்கென தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை ஆய்வு செய்த நீதிபதிகள், மாநகராட்சியின் நடவடிக்கை திருப்திகரமாக இருப்பதாகவும், இதே நடைமுறை தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதற்கான சுற்றறிக்கையை மாநில தலைமைச் செயலர் அனுப்ப வேண்டும் எனவும், வழக்கை காவல்துறை சிறப்புப் படை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Facebook Comments Box