இபிஎஸ் சுற்றுப்பயணம் வெற்றியடைய மீனாட்சி அம்மன் கோயிலில் செல்லூர் ராஜூ வழிபாடு
மதுரை மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணம் வெற்றியடைய, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இன்று மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், எடப்பாடி பழனிசாமி தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, மதுரையில் செப்டம்பர் 1 முதல் 4 நாட்கள் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக, செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் மீனாட்சி அம்மன் கோயிலில் எபிஎஸ் சுற்றுப்பயண அழைப்பிதழை வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள வணிக வளாகங்களுக்கு சென்று, பொதுமக்களிடம் அழைப்பிதழ்களை வழங்கியும் செல்லூர் ராஜூ அழைப்பு விடுத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் எம்எல்ஏ அண்ணாத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ கூறியதாவது:
“செப்டம்பர் 1ஆம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி மதுரையில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் அழைப்பிதழ் வழங்கி தரிசனம் செய்தோம். அவரது பயணம் வெற்றியடைய பூஜை செய்துள்ளோம்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் மதுரைக்கு ரூ.8,000 கோடிக்கு மேல் திட்டங்களை வழங்கினார். முல்லைப்பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் இன்று மதுரை மக்கள் 24 மணி நேரமும் குடிநீர் பெறுகின்றனர். அவரது சுற்றுப்பயணத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள்” என தெரிவித்தார்.