காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்: செப்டம்பருக்கான 37 டிஎம்சி நீரை கோரிய தமிழகம்

டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 43வது கூட்டத்தில், செப்டம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 37 டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:

எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழக உறுப்பினரான நீர்வளத்துறை செயலர் ஜெ. ஜெயகாந்தன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் இரா. சுப்பிரமணியம் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.

அப்போது, மேட்டூர் அணையின் நீர்நிலை தற்போது முழு கொள்ளளவான 93.470 டிஎம்சியை எட்டியுள்ளது. இவ்வாண்டில் ஐந்தாவது முறையாக மேட்டூர் அணை நிறைந்துள்ளது. அணைக்கு தற்போது விநாடிக்கு 7,684 கனஅடி நீர் வரத்து உண்டு. அதே சமயம், அணையிலிருந்து விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்காக விநாடிக்கு 12,850 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

கர்நாடக அணைகளில் போதியளவு நீர் இருப்பு மற்றும் வரத்து உள்ளதால், செப்டம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகம் பிலிகுண்டுலுவில் விடுவிக்க வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுமாறு தமிழகம் வலியுறுத்தியுள்ளது.

Facebook Comments Box