சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ.5 கோடி முறைகேடு புகார் – டீன் சவுந்தரராஜன் பதவி நீக்கம்
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் டீனாக பணியாற்றி வந்தவர் மருத்துவர் சி. சவுந்தரராஜன்.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் கால்நடை நலக் கல்வி மையத்தில் சுமார் ரூ.5 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக சவுந்தரராஜன் மீது மைய இயக்குநர் புகார் அளித்தார்.
இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் முதற்கட்ட விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில், சவுந்தரராஜன் டீன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மேலும், 5 அதிகாரிகள் துறைக்குள் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டனர்.
முறைகேடு குறித்த உண்மை நிலையை வெளிச்சம் போட 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, 15 நாளுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்ததாவது:
“யாரும் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை. டீன் பொறுப்பிலிருந்தே சவுந்தரராஜன் விலக்கப்பட்டுள்ளார். அவர் பேராசிரியராக தொடர்வார். 5 அதிகாரிகள் வழக்கம்போல துறைமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குழுவின் அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டது.
இதற்கிடையே, டீன் (பொறுப்பு) பொறுப்புக்கு மருத்துவர் எஸ். சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.