விநாயகர் சதுர்த்தி: 4 டன் மலர் அலங்காரத்தில் மக்களை கவர்ந்த புலியகுளம் முந்தி விநாயகர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற புலியகுளம் முந்தி விநாயகர், 4 டன் மலர்களால் செய்யப்பட்ட ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பெருமளவிலான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.

இன்று (ஆகஸ்ட் 27) நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயம்புத்தூரில் உள்ள பல விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட மகத்தான விநாயகராக திகழும் புலியகுளம் ஸ்ரீ முந்தி விநாயகர் கோயிலில் அதிகாலை வேதமந்திரங்களுடன் யாகவேள்வி மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றது.

16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர், 50 கிலோ எடையிலான சந்தனக் காப்புடன், 4 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முந்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கொழுக்கட்டை, அதிரசம், முறுக்கு, லட்டு உள்ளிட்ட இனிப்பு பலகாரங்களுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் தங்கள் மனோரதங்களை வேண்டி இறைபணிந்தனர்.

அதேநேரத்தில், ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலில் 16 வித அபிஷேகங்களும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கணபதி நகரில் உள்ள வெற்றி விநாயகர் கோயிலில் அதிகாலை 108 சங்குப் பூஜை, கணபதி ஹோமம், பெருவேள்வி நடைபெற்றது. புண்ணிய நதிகளின் தீர்த்தங்களும் 108 சங்கு தீர்த்தங்களும் கொண்டு அபிஷேகம் செய்து, விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, லட்சார்ச்சனை மற்றும் மகா அன்னதானம் நடைபெற்றது.

சரவணம்பட்டியில் அமைந்துள்ள சிவகாமியம்மன் உடனுறை சிரவணமாபுரீசுவரர் கோயிலிலும் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. அங்கு சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Facebook Comments Box