ஆம்பூர் கலவர வழக்கு தீர்ப்பு நாளை – 1,000+ காவலர்கள் குவிப்பு

ஆம்பூர் கலவரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, நேற்று (ஆக.26) வழங்கப்பட வேண்டியிருந்த நிலையில், ஆக.28 (நாளை)க்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழனியின் மனைவி பவித்ரா (25), 2015 மே 24 அன்று மாயமானார். இதுகுறித்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரணையில் ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அகமது (26) கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டார். அப்போது தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் உடல் நலக்குறைவால் அவர் ஆம்பூர், வேலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதனால் ஆம்பூரில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காவல் ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் உட்பட 7 காவலர்களுக்கு எதிராக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் நடந்த போராட்டம் வன்முறையாக மாறி, பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. பயணிகள் காயமடைந்தனர். காவல்துறையினர் தடியடி நடத்தினர். 54 காவலர்கள் காயமடைந்தனர்.

கலவரத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பேருந்துகள் உடைக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை போர்க்களமாக மாறியது. 191 பேருக்கு எதிராக 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பல சிறைகளில் அடைக்கப்பட்டனர். வழக்கு பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றது. தீர்ப்பு ஆக.26 அன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக 1,200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் குவிக்கப்பட்டனர். நீதிமன்ற வளாகம், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் கடும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பை ஆக.28க்கு ஒத்திவைத்தார். இதனால், ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நிலவி வந்த பதற்றம் ஓரளவு குறைந்திருந்தாலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டுள்ளன.

Facebook Comments Box