ஆளே இல்லாத மைதானத்தை பார்த்து பேசிய அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்!
சிவகங்கையில் முதல்வர் கோப்பைக்கான தொடக்க விழாவில் கடும் வெயிலால் மாணவர்கள் மரத்தடியில் ஒதுங்கினர். இதனால் ஆளே இல்லாத மைதானத்தை பார்த்து அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பேசினார்.
முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் பள்ளி, கல்லூரி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் தொடக்க விழா சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் விருந்தினர்கள் அமர வகையில் மட்டுமே மேடை அமைக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் அமர பந்தல் அமைக்கவில்லை. விழாவும் ஒரு மணி நேரம் தாமதமாக பகல் 11.30 மணிக்கு துவங்கியது. கடும் வெயிலால் மாணவர்கள் மைதானத்தில் நிற்க முடியவில்லை.
இதையடுத்து அவர்கள் சற்று தொலைவில் இருந்த மரத்தடி நிழலில் ஒதுங்கினர். இதனால் மைதானம் ஆளே இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. எனினும் ஆளே இல்லாத மைதானத்தை பார்த்து அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பேசினார். அரை மணி நேரம் பேசி முடித்த பின்னர் விளையாட்டுப் போட்டிகளை அவர் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் கா. பொற் கொடி, தமிழரசி எம்எல்ஏ, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.