மூளை அமீபா தொற்று நோய் அல்ல; பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
“மூளை அமீபா பாதிப்பு தொற்று நோய் அல்ல. எனவே மக்கள் அச்சமடைய தேவையில்லை” என்று சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
கேரளாவில் 18 பேர் நேக்லேரியா ஃபோவ்லேரி (Naegleria Fowleri) எனப்படும் அரிதான அமீபா காரணமாக மூளைக்காய்ச்சலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
மருத்துவ நிபுணர்கள் விளக்குவதன்படி, அசுத்தமான நீர், மாசுபட்ட குளங்கள், குட்டைகள் மற்றும் சேறும் சதுப்பு நிறைந்த நீர்நிலைகளில்தான் இந்த அமீபா உருவாகிறது. அத்தகைய இடங்களில் குளிக்கும் போது, மூக்கின் வழியே அமீபா நுழைந்து மூளை பாதிக்கிறது. இதனால் பிரைமரி அமீபிக் மெனிங்கோ-என்சஃபலிட்டிஸ் (PAM) எனப்படும் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு மரணம் சம்பவிக்க வாய்ப்பு உண்டு.
இந்த நோய் தொற்றாக பரவாது என்பதால், பொதுமக்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், அசுத்தமான குளங்கள், பராமரிப்பு இல்லாத நீச்சல் குளங்கள் போன்ற இடங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தலைவலி, காய்ச்சல், வாந்தி, மன குழப்பம், கழுத்து வலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தெரியும். கேரள சுகாதாரத்துறை இதற்கான சிறப்பு சிகிச்சைகளை வழங்கி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தெருநாய்கள் தொடர்பாக:
பின்னர், தெருநாய்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் கூறியதாவது:
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் வேறுபாடுகள் உள்ளன. தற்போது தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, மீண்டும் அவற்றை அப்பகுதியில் விடுவிப்பதே நடைமுறையாக உள்ளது.
முதல்வரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெருநாய்களுக்கு குடில்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் விவாதிக்கப்பட்டன. முன்பு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மட்டுமே நாய்க்கடி மருந்துகள் (ARV) கிடைத்தன. ஆனால், இப்போது ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார மையங்களிலும் நாய்க்கடி மருந்துகள் (ARV) மற்றும் பாம்புக்கடி மருந்துகள் (ASV) கிடைக்கின்றன என தெரிவித்தார்.