“மதுரை மேயர் இந்திராணி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்” – செல்லூர் ராஜூ வலியுறுத்தல்
மதுரை மாநகராட்சி சொத்து வரி மோசடி வழக்கில், மேயர் இந்திராணியின் கணவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பதவியில் நீடிக்கக் கூடாது என முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக மதுரை மாநகரச் செயலாளர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“மாநகராட்சியில் எந்த அதிகாரப்பூர்வ பொறுப்பும் இல்லாத நிலையில், மேயரின் கணவர் சொத்து வரி ஊழலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். கணவர் செய்த தவறுகளுக்கான பொறுப்பை மேயர் ஏற்றுக் கொண்டு உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையெனில் தமிழக அரசு தலையிட்டு அவரை நீக்க வேண்டும் என்பதே அதிமுகவின் கோரிக்கையாகும்.
குற்றச்சாட்டு நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் மேயர் பதவியில் தொடர்வது நியாயமல்ல, சட்டத்துக்கும் ஒழுக்கத்துக்கும் புறம்பானது. தமிழகம் முழுவதும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகிய பிறகே விசாரணை நடந்தது. அதுபோல், மேயர் இந்திராணியும் விலகி, புதியவரை தேர்வு செய்ய வேண்டும். இதன்மூலம் தான் மதுரை மக்களுக்கு நிம்மதி கிடைக்கும்.
மேலும், நீதிமன்றமே வரி வசூலில் உள்ள மோசடிகளை கண்டறிய குழு அமைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மேயர் பதவியில் தொடர்ந்து இருப்பது முறையற்றதும் நகைப்புக்குரியதுமாகும். கணவர் குற்றம் செய்திருப்பதால் மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால் அவர் பதவியில் இருக்கும் நிலையில் விசாரணை நியாயமானதாக இருக்காது. எனவே பதவி விலகிய பின் விசாரணை நடைபெற வேண்டும்.
சொத்து வரி முறைகேட்டில் அதிமுக உறுப்பினர்கள் தொடர்பில்லாதபோதும், வெறும் எதிர்ப்பார்ட்டி என்பதற்காக போலீசார் விசாரணை நடத்தும் போக்கு முற்றிலும் தவறானது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு பல முக்கியமான வளர்ச்சித் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. புதிய ஆட்சியர் அலுவலகம், புதிய பாலங்கள், பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் தான் மதுரை முன்னேறியது. ஆனால், தற்போதைய இரண்டு அமைச்சர்கள் மதுரைக்காக என்ன செய்துள்ளனர் என்பதை சொல்ல முடியுமா?” என்று செல்லூர் ராஜூ கேள்வியெழுப்பினார்.