கண்ணப்பர் திடலில் நாய் கருத்தடை மையம்: சென்னை மாநகராட்சியிடம் விளக்கம் கோரி உயர் நீதிமன்றம் உத்தரவு
விளையாட்டு மைதானமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் நாய் கருத்தடை மையம் அமைக்கக் கூடாது என கோரிய வழக்கில், சென்னை மாநகராட்சி இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நேரு விளையாட்டு அரங்கம் அருகிலுள்ள கண்ணப்பர் திடலின் ஒரு பகுதியில் நாய் கருத்தடை மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அன்னை கல்வி மற்றும் சமூக சேவைகள் அறக்கட்டளை நிறுவனர் சிவ குணசேகரன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “விளையாட்டு மைதானம் என்று ஒதுக்கப்பட்ட நிலத்தை வேறு வித பயன்பாட்டுக்கு மாற்றக் கூடாது” என்று நீதிமன்றம் முன்பு பல வழக்குகளில் வழங்கிய உத்தரவுகளை குறிப்பிட்டார்.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, மாநகராட்சியிடம் விளக்கம் கேட்டது. மாநகராட்சி தரப்பில், “உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தெருநாய்களுக்கு கருத்தடை மையம் அமைக்கப்படுகிறது. மைதானம் முழுவதையும் மாற்றவில்லை; 6,000 சதுர அடி பரப்பளவிலான பகுதியில்தான் மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.
இதையடுத்து, மனுவுக்கு மாநகராட்சி இரண்டு வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தது.