“2006-ல் விஜயகாந்த் தாக்கம் ஏற்படுத்தியதைப் போல, 2026-ல் விஜய் தாக்கம் உருவாகும்” – தினகரன் கணிப்பு

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், “2006 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் ஒரு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியதைப் போலவே, 2026 தேர்தலில் நடிகர் விஜயும் ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துவார்” எனத் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அவர் பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்தியா பல்வேறு மொழிகளில் பேசப்படும் நாடு. யார் எந்த மொழியில் பேசுகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஆனால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து யாராவது அவதூறு பேசினால், அதை வன்மையாக கண்டிக்க வேண்டும்.

2026 தேர்தலில் விஜய் தாக்கம் உருவாகும். இது அனைத்து கட்சிகளையும் பாதிக்கும். நான் உண்மையை சொல்வதால் விஜயுடன் கூட்டணி வைப்பேன் என்ற அர்த்தமில்லை. எங்கள் கூட்டணி நிலைப்பாடு டிசம்பரில் தீர்மானிக்கப்படும்; பின்னர் தொகுதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கலாம்,” என்றார்.

அவர் தொடர்ந்து, “நாட்டின் பாதுகாப்பு, வரலாறு, எதிர்காலம் ஆகியவற்றுக்காக பிரதமர் மோடி மூன்றாவது முறையும் ஆட்சிக்கு வருவதே சிறந்தது என்று நாங்கள் கருதி, எந்த அழுத்தமும் இன்றி 2024 தேர்தலில் ஆதரவு தெரிவித்தோம். மனக்கசப்பால் கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வத்தை, பாஜக தலைவர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் சேர்ப்பது நல்லது என்பதே எல்லோருக்கும் தெரியும்.

அதிகார பலம் கொண்ட திமுகவை வீழ்த்த, ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் அனைவரும் ஒருமித்து செயல்பட வேண்டும். அதற்காக நான் அதிமுகவுடன் இணையப் போகிறேன் என்ற பொருள் கிடையாது. தமிழகத்தில் பல தசாப்தங்களாக செயல்படும் கட்சிகளுக்கு இணையாக, அமமுக அமைப்பையும் நாங்கள் கட்டியெழுப்பி வருகிறோம். எங்கள் இலக்கை அடையும் வரை உறுதியுடன் செயல்படுவோம். அதிமுகவுடன் இணைய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கோ எங்கள் நிர்வாகிகளுக்கோ இல்லை. 2026 தேர்தலில் அமமுக தனித்துவமான முத்திரை பதிக்கும்,” என்றும் தினகரன் வலியுறுத்தினார்.

Facebook Comments Box