முதல்வர் கோப்பைக்கான சிலம்பப் போட்டியை தகுதியற்ற நடுவர்கள் நடத்துவதாக மதுரையில் தர்ணா!
மதுரை ரேஸ் கோர்ஸ் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் இன்று, தகுதி இல்லாத நடுவர்களால் சிலம்பப் போட்டிகள் நடத்தப்படுவதாகக் கூறி, வீரர்களும் அவர்களது பெற்றோரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஏற்பாட்டில் மதுரையில் ரேஸ் கோர்ஸ் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்க மாவட்டம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவியர்கள் காலை 6 மணி முதலே வந்திருந்தனர்.
ஆனால், திறமை வாய்ந்த நடுவர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்படுவதாக சிலம்ப வீரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் குற்றம் சாட்டி தர்ணாவில் அமர்ந்தனர். மேலும், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் மாணவர்கள் சோர்வு அடைந்ததாகவும் பெற்றோர் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து சிலம்ப வீரர்களும், பெற்றோர்களும் தெரிவித்தது:
“முதல்வர் கோப்பை என்ற பெயரில் போட்டிகள் நடக்கின்றன என்பதால் மாணவர்களை அழைத்து வந்தோம். ஆனால், சிலம்ப விளையாட்டின் விதிகள், நடைமுறைகள் தெரியாத உடற்கல்வி ஆசிரியர்களை நடுவர்களாக நியமித்துள்ளனர். இதனால் சரியான வீரர்கள் தேர்வு செய்யப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் போட்டியில் பங்கேற்க மறுத்தனர்.
மேலும், குடிநீர், முதலுதவி, கழிப்பறை, பாதுகாப்பு சாதனங்கள் போன்ற அடிப்படை வசதிகளே இல்லை. போட்டிகளின் ஒருங்கிணைப்பும் சரியாக செய்யப்படவில்லை. பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.
காலை 11.30 மணி வரை கூட போட்டிகள் ஆரம்பிக்கப்படவில்லை. அரசு பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் அனுப்ப மறுக்கின்றனர். இருந்தாலும் முதல்வர் கோப்பை என்ற பெயரில் அவர்களை அழைத்து வந்துள்ளனர். தகுதி அற்ற நடுவர்கள் நியமனம் காரணமாக போட்டி நாட்கள் வீணாகின்றன. இனி குறைந்தது தகுதியானவர்களை நடுவர்களாக வைத்து போட்டிகள் நடத்தப்பட வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி, போட்டிகள் ஆகஸ்ட் 29-ம் தேதி (இன்று) நடைபெறும் என அறிவித்தனர்.