குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்பரில் ராக்கெட் புறப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ராக்கெட் விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் குலசேகரன்பட்டினத்தில் உருவாக்கப்படுகிறது. 2,292 ஏக்கர் பரப்பளவில், ரூ.986 கோடி செலவில் இந்த ஏவுதளம் கட்டமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழாவை பிரதமர் நரேந்திர மோடி 2024 பிப்ரவரி 28-ஆம் தேதி நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ரூ.100 கோடி மதிப்பில் ராக்கெட் லாஞ்ச் பேட் அமைக்கும் பணிகள் சமீபத்தில் பூமி பூஜையுடன் தொடங்கின. மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பணிகளை தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து ஆண்டுதோறும் 25-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும். தற்போதைய நிலையில் இஸ்ரோவுக்கு ஒரே ஏவுதளம் தான் உள்ளது; அது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம். அங்கிருந்து பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளின் உதவியுடன் இந்தியா மற்றும் உலக நாடுகளின் செயற்கைக்கோள்கள் புறப்படுகின்றன.

இப்போது நாட்டின் 2-வது ஏவுதளமாக குலசேகரன்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்தது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த ஆறு மாதங்களாக இங்கு தீவிர கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 33 முக்கிய பணிகள் ரூ.100 கோடி செலவில் முன்னெடுக்கப்படுகின்றன.

அடுத்த ஆண்டு நவம்பரில் இங்கிருந்து 500 கிலோ எடையுடைய ராக்கெட் பாயும். அதற்கு முன்னதாக, அடுத்த 3 மாதங்களில் சிறிய ரக ராக்கெட்டுகள் ஏவப்படும். தனியார் நிறுவன ராக்கெட்டுகளும் இங்கிருந்து புறப்படும். அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடையும். குலசேகரன்பட்டினம் இந்தியாவின் விண்வெளி வரைபடத்தில் முக்கிய இடம் பெறும். ஆண்டுதோறும் 25 ராக்கெட்கள் வரை இங்கிருந்து புறப்படும்” என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மைய இயக்குநர்கள் ராஜராஜன், பத்மகுமார், மகேந்திரகிரி, இஸ்ரோ உந்துவிசை வளாக இயக்குநர் ஆசீர் பாக்கியராஜ், குலசேகரன்பட்டினம் ஏவுதள திட்ட இயக்குநர் சரவண பெருமாள், எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், மாவட்ட வன அதிகாரி ரேவதி ரமன், திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Facebook Comments Box