பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டதாக இளைஞர் புகார்: விஜய் மீது வழக்கு பதிவு – விசாரணை தொடக்கம்

மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்ற தவெக இரண்டாவது மாநில மாநாட்டில், இளைஞர் ஒருவர் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டதாக கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் கட்சித் தலைவர் விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

அந்நாள் மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். தொண்டர்கள், ரசிகர்கள் விஜயை அண்மையில் பார்க்கும் வகையில் 800 மீட்டர் நீளத்தில் ‘ரேம்ப் வாக்’ அமைக்கப்பட்டது. அந்த நேரத்தில், அருகே சென்று விஜயை பார்க்க முயன்ற பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையத்தைச் சேர்ந்த சரத்குமார், பவுன்சர்களால் குண்டுக்கட்டாக தூக்கி வீசப்பட்டதாகவும், அவர் கம்பியைப் பிடித்துக் கொண்டு உயிர் தப்பியதாகவும் கூறப்பட்டது.

பின்னர், சரத்குமார் தாயார் சந்தோசத்துடன் சேர்ந்து பெரம்பலூர் மாவட்ட கூடுதல் எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். அதில் அவர், “விஜயை பார்க்கும் ஆர்வத்தில் மேடையில் ஏறினேன். அப்போது பவுன்சர் ஒருவர் கேவலமான வார்த்தையில் திட்டினார். மற்றொரு பவுன்சர் என்னை அடித்து, கீழே தூக்கி வீசினார். இதில் நெஞ்சு மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. யாரும் முதலுதவி செய்யவில்லை. இதுபோல் மீண்டும் நடக்கக் கூடாது. விஜயும், சம்பந்தப்பட்ட பவுன்சர்களும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.

இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட குன்னம் போலீசார், விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது கூட்டமாகத் தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் மாநாடு நடந்த இடம் மதுரை கூடக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள் வந்ததால், வழக்கு அங்கு மாற்றப்பட்டது. தற்போது விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது விசாரணை தொடங்கியுள்ளது.

போலீசார் தெரிவித்ததாவது: “புகார் அளித்தவர் விஜய் கட்சியினரா? தூக்கி வீசப்பட்டவர் உண்மையில் சரத்குமார் தானா? என்பதை வீடியோ ஆதாரங்களுடன் முதலில் ஆராய்கிறோம். பின்னர் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும்” என்றனர்.

இதற்கிடையில், சரத்குமார் தனது தாயாருடன் மதுரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்தை சந்தித்து தனிப்பட்ட முறையில் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர், “எனக்கு எந்தக் கட்சியுடனும் தொடர்பு இல்லை. இது பிறருக்கு நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் புகார் கொடுத்தேன். ஆனால் புகாரை வாபஸ் பெறும்படி அடையாளம் தெரியாத நபர்கள் மிரட்டல் அழைப்புகள் விடுக்கின்றனர். மாநாட்டில் நான் பங்கேற்றுள்ளேன். ஆனால் யாரோ ஒருவர், நான் அந்த இளைஞர் அல்ல எனக் கூறி பொய்யான வீடியோவை வெளியிட்டுள்ளார்” என்றார்.

இதுகுறித்து தவெக பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“மாநாட்டில் தூக்கி வீசப்பட்டவர் பெரம்பலூரைச் சேர்ந்த சரத்குமார் அல்ல. விழுப்புரத்தைச் சேர்ந்த அஜய் என்பவர்தான். அவர் இதுகுறித்து எந்த புகாரும் அளிக்கவில்லை. தற்போது சரத்குமார் அளித்திருக்கும் புகார் பொய்யானது. யாரோ ஒருவரின் தூண்டுதலில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. இதன் பின்னணியில் ஆளும் கட்சியின் கையில் விளையாடும் செயல் உள்ளது. இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்” என்றார்.

Facebook Comments Box