செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்ல நிபந்தனைகள் மாற்றம் – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை மாற்றி, சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள அசோக்குமார், இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் அவருக்கு அனுமதி அளித்தது.

பின்னர், அந்த நிபந்தனைகளில் மாற்றம் கோரி அசோக்குமார் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் நடந்த விசாரணையில், அவர் தனது மனைவிக்கு பதிலாக மகளை உடன் கொண்டு செல்ல விரும்புவதாகவும், பயண தேதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அமெரிக்கா சென்றதும் அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு நேரில் செல்வதற்குப் பதிலாக மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரினார்.

இந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அசோக்குமார் அமெரிக்கா செல்லும் நிபந்தனைகளை மாற்றியமைத்து உத்தரவிட்டது.

Facebook Comments Box