அரசுப் பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐஐடியில் சேர்ந்தார்களா? – அன்புமணி

அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியில் சேர்ந்ததாக கூறப்படும் தவறான தகவல்களை பரப்புவதை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். உண்மையற்ற செய்திகளைப் பரப்பும் திமுக அரசுக்கு அடுத்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசின் ‘அனைவருக்கும் ஐஐடி’ திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் இருந்து 28 பேர் சென்னை ஐஐடி-யில் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். ஆனால் இந்த அறிவிப்பு உண்மையல்ல; திமுக அரசு தொடர்ந்து போலியான அறிவிப்புகள் மூலமே மக்களை ஏமாற்றி வருகிறது என்பதற்கு இது ஒரு சான்று.

அந்த அறிவிப்பைப் பார்த்தவுடன் எனக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும், மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் மாணவர்கள் ஐஐடியில் சேர முடிகிறது. இந்நிலையில் 28 மாணவர்கள், அதுவும் ஒரே நேரத்தில் சென்னை ஐஐடியில் சேர்ந்துள்ளனர் என்பது மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் பின்னர் அது தவறான தகவல் என்பது உறுதியானது.

ஐஐடி-களில் சேர்வதற்கு முதலில் ஜே.இ.இ (மெயின்), அதன் பின் ஜே.இ.இ (அட்வான்ஸ்டு) என்ற இரண்டு கட்டத் தேர்வுகள் உள்ளன. அதில் தகுதி பெற்று தரவரிசை பெற்றவர்களுக்கே பி.டெக் படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும். ஆனால் தமிழக அரசு கூறும் 28 பேரில், 4 பேர் மட்டும் அட்வான்ஸ்டு தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். மீதமுள்ள 24 பேருக்கு அந்தத் தகுதியும் கிடையாது.

உண்மையில், 25 பேர் சென்னை ஐஐடி நடத்தும் பி.எஸ். (டேட்டா சயின்ஸ்) படிப்பிலும், 3 பேர் பி.எஸ். (எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ்) படிப்பிலும் சேர்ந்துள்ளனர். இவை ஆன்லைன் மூலம் நடத்தப்படும் சாதாரண படிப்புகள். இதற்காக தனியாக ஆசிரியர்களே நியமிக்கப்படவில்லை; பதிவு செய்யப்பட்ட காணொலிகள் மூலமாகவே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு ஜே.இ.இ அட்வான்ஸ்டு தகுதி அவசியமில்லை. தனி நுழைவுத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தாலே சேர முடியும். உதாரணத்திற்கு பட்டியலினத்தவர் 30%, ஓபிசி 35%, பொது பிரிவு 40% எடுத்தாலே போதும். கூடவே, 12-ஆம் வகுப்பு முடித்திருக்கவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை; 11-ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்.

தமிழக அரசு கூறும் 28 பேரில் 14 பேர் இன்னும் 12-ஆம் வகுப்பு கூட முடிக்காதவர்கள்; அவர்கள் இப்போது தான் 12-ஆம் வகுப்புக்கு சென்றுள்ளனர். இதுவே அந்தத் தகவல் தவறானது என்பதை நிரூபிக்கிறது.

தற்போது சென்னை ஐஐடி-யின் இந்த பி.எஸ் படிப்புகளில் மொத்தம் 36 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். அவர்களில் பல ஆயிரம் பேர் வேறு கல்லூரிகளில் வேறு படிப்புகள் படிக்கிறார்கள் அல்லது வேலை பார்த்துக்கொண்டே படிக்கிறார்கள். இவ்வளவு எளிதாக சேரக்கூடிய படிப்பில் சிலர் சேர்ந்திருக்கிறார்கள் என்பதற்காகவே, திமுக அரசு “அரசுப் பள்ளி மாணவர்கள் ஐஐடியில் சேர்ந்துவிட்டார்கள்” எனச் சொல்லி மக்களை தவறாக வழிநடத்துகிறது.

முக்கியமாக, இந்தப் படிப்புகள் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டவை. திமுக இதற்கு முன்பு அதனை கடுமையாக எதிர்த்தது. ஆனால் இப்போது அதே கொள்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படிப்புகளை விளம்பரப்படுத்துகிறது. இது திமுகவின் இரட்டை நிலைப்பாட்டுக்கே எடுத்துக்காட்டு.

ஆகையால், அரசு பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியில் சேர்ந்தனர் என தவறான செய்திகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இத்தகைய தகவல்களை வைத்து தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. பொய்யை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்கிற திமுகவுக்கு மக்கள் விரைவில் உரிய பாடம் புகட்டுவார்கள்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box