திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் மிதந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மனுக்கள் – மக்கள் ஆச்சரியம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் தமிழகமெங்கும் நடைபெற்று வருகின்றன. இம்முகாம்களில் பட்டா மாற்றம், ரேஷன் கார்டு, மகளிர் உரிமைத் தொகை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு பொதுமக்கள் மனுக்கள் அளித்து வருகின்றனர். அந்த மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, திருப்புவனம் வட்டத்தில் பூவந்தி, கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை, மடப்புரம் போன்ற பகுதிகளில் முகாம்கள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டன.
ஆனால், நேற்று வைகை ஆற்றில் அந்த முகாம்களில் சேகரிக்கப்பட்ட மனுக்கள் பல மிதந்தன. இதைக் கண்ட அப்பகுதி இளைஞர் கார்த்திக், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பெரும்பாலும் அவை பட்டா மாற்றத்துக்கான மனுக்களாக இருந்தன. தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மனுக்களை சேகரித்து விசாரணை தொடங்கினர்.
மனுக்கள் ஆற்றில் மிதந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள்,
“ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனுக்கள் அனைத்தும் ஏற்கனவே தீர்க்கப்பட்டவையே. அவை எவ்வாறு அங்கே போய்ச் சேர்ந்தன என்பது தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது” என விளக்கம் அளித்தனர்.