ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் தொடர வேண்டுமா? – காவல்துறையிடம் உயர் நீதிமன்றம் கேள்வி

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்மீது அமல்படுத்தப்பட்ட குண்டர் சட்டம் இன்னும் நீடிக்க வேண்டுமா? என சென்னை உயர்நீதிமன்றம் சந்தேகம் எழுப்பியுள்ளது.

மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு, முன்னதாகவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால், சென்னை காவல் ஆணையர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஞானசேகரனின் தாயார் கங்காதேவி மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையில், மகளிர் சிறப்பு நீதிமன்றம் அந்த வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

இந்நிலையில், குண்டர் சட்டம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,

“அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கை அடிப்படையாகக் கொண்டு தான் குண்டர் சட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது அதே வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில், குண்டர் சட்ட உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டுமா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ஞானசேகரனுக்கு மீதமுள்ள பிற குற்ற வழக்குகளையும் சுட்டிக்காட்டி, “அவரது கொடுங்குற்றச் செயல்கள் பொதுமக்களின் அமைதிக்கே பாதிப்பை உண்டாக்குகின்றன” என்று வாதிட்டார். மேலும், இதற்கான விரிவான வாதங்களுக்காக வழக்கை ஒத்திவைக்கக் கோரினார்.

நீதிபதிகள் அதனை ஏற்று, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Facebook Comments Box