பள்ளி மாணவி பாலியல் வழக்கு: கராத்தே பயிற்சியாளரின் தண்டனைக்கு இடைக்கால தடை மறுப்பு – சென்னை உயர் நீதிமன்றம்
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சென்னை அண்ணாநகரில் கராத்தே மற்றும் ஜூடோ தற்காப்புக் கலை பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். 2021-ஆம் ஆண்டில் பயிற்சியின் போது மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார், கெபிராஜ் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
முதலில் கைது செய்யப்பட்ட கெபிராஜ், பின்னர் ஜாமீனில் வெளியேறினார். அதன் பின் மேலும் சில மாணவிகள் அவர்மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. விசாரணையை மேற்கொண்ட சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தண்டனையை ரத்து செய்யவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் கெபிராஜ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கெபிராஜ் தரப்பு வழக்கறிஞர், “பாலியல் தொந்தரவு எதுவும் செய்யப்படவில்லை; இது பொய்யான குற்றச்சாட்டு” என வாதிட்டு, தண்டனையை நிறுத்திட கோரினார்.
ஆனால், நீதிபதி அதை ஏற்க மறுத்து, தண்டனை நிறுத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், கெபிராஜ் தாக்கல் செய்த மேல்முறையீட்டுக்கு காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 18-க்கு ஒத்திவைத்தார்.