சொத்துவரி விவகாரம்: மேயருக்கு ஆதரவு – மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் உறுதி
மதுரை மாநகராட்சி கூட்டத்தில், சொத்துவரி பிரச்சினையில் மேயர் இந்திராணிக்கு திமுக கவுன்சிலர்களோடு, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக கவுன்சிலர்களும் துணை நின்றனர். அதிமுகவினர் கூட்டத்தை புறக்கணித்ததை கண்டித்தும், அவர்கள் விவாதத்தில் கலந்துகொள்ளாமல் பயந்துவிட்டதாகவும் கூறினர்.
மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் சொத்துவரி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட நிலையில், “மேயராக இந்திராணி தொடரும் வரை கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்” என அதிமுக அறிவித்தது. இதனால் கூட்டம் நடைபெறுமா என்ற குழப்பம் நிலவியது. எனினும், மேயர் வந்ததும், பெரும்பான்மையான கவுன்சிலர்கள் பங்கேற்று கூட்டம் தொடங்கியது.
திமுக கவுன்சிலர் ஜெயராஜ், “சில தவறுகள் நடந்திருந்தாலும், அதிமுக நேரில் வந்து விவாதிக்க வேண்டும். 2011 முதல் முறைகேட்டை விசாரிக்க வேண்டும் என்றால் அதிமுக சிக்கிக்கொள்ளும் என்பதால் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை” என்றார்.
காங்கிரஸ் கவுன்சிலர் கார்த்திகேயன், “எந்த சூழலிலும் நாங்கள் மேயருடன் இருப்போம்” என தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் குமரவேல், “அதிமுக வராமல் ஒதுங்கிவிட்டது. 2011 முதல் விசாரணை நடந்தால் பல உண்மைகள் வெளிப்படும்” என்றார்.
மேலும், காங்கிரஸ் கவுன்சிலர் சுவேதா, “மண்டல கூட்டங்கள் நடைபெறாததால் எங்கள் பிரச்சினைகளை தெரிவிக்க முடியவில்லை” என குற்றம்சாட்டினார். திமுக கவுன்சிலர் சோலை செந்தில்குமார், “அதிமுக கவுன்சிலர்கள் கைது பயத்தில் கூட்டத்திற்கு வரவில்லை” என்றார்.
ஆணையாளர் சித்ரா, “2000 முதல் எவ்வித தவறும் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். குடியிருப்பு தவிர்த்து வணிகக் கட்டிடங்களில் வரி குறைக்கப்பட்டிருந்தால் திருத்தப்படும்” என விளக்கமளித்தார்.