அமெரிக்க வரி சுமையால் சிக்கல்: செப்டம்பர் 2-ம் தேதி திருப்பூரில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
திருப்பூரை தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய அரசை எதிர்த்து, மேலும் அமெரிக்கா விதித்துள்ள வரி பிரச்சினையிலிருந்து உடனடியாகஉடனடியாக நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ சார்பில் செப்டம்பர் 2-ம் தேதி திருப்பூர் ரயிலடி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூட்டணியினர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:
அமெரிக்கா இந்தியப் பொருட்கள் இறக்குமதி மீது விதித்துள்ள 50% வரி காரணமாக, பின்னலாடைத் தொழிலின் மையமாக விளங்கும் திருப்பூர் மிகப்பெரிய நெருக்கடியையும் இழப்பையும் சந்தித்துள்ளது. சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டதோடு, பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் நிலவுகிறது.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி சிக்கல்கள், கொரோனா தொற்று என தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகளால் சிதைந்திருந்த திருப்பூர் பின்னலாடைத் துறை, தற்போது மீண்டு ஆண்டுக்கு 45,000 கோடிக்கும் மேல் ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்திருந்தது. ஆனால் இந்நிலையில் அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு பெரும் பேரிடியாக தாக்கியது. இது மத்திய பாஜக அரசின் வெளிநாட்டு கொள்கை தோல்வியை வெளிக்காட்டுகிறது.
திருப்பூர் தொழிலதிபர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, முதல்வர் கடந்த 16-ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். தமிழ்நாட்டின் ஜவுளித் துறை சுமார் 75 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. அதில், அமெரிக்க வரி காரணமாக 30 இலட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இருந்தும் மத்திய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதல்வர் மீண்டும் வலியுறுத்தியும், ஒன்றிய அரசு அமைதியாக இருப்பது புரியாத ஒன்று. அபாயம் வரப்போகிறது என்று முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டும், அதை எதிர்கொள்ள எந்த முயற்சியும் செய்யாமல் அமைதியாய் இருப்பது, திருப்பூர் தொழிலாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை புறக்கணிக்கும் செயல் ஆகும்.
பெரும் தொழில் அதிபர்கள் அதானி, அம்பானி போன்றோருக்காக உடனடி உதவி செய்யும் மத்திய பாஜக அரசு, சிறு மற்றும் நடுத்தர வணிகர்களின் நலனை கவனிக்காதது ஏன்? குறிப்பாக தமிழ்நாட்டின் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு தொடர்ந்து அக்கறையின்மையை காட்டுவது, அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு பாஜக அரசு துணை போகிறது என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
அமெரிக்கா ஒருபுறம் வரி சுமத்த, மறுபுறம் மத்திய பாஜக அரசு எந்த நிவாரண நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, இருவழியிலும் நம்மை முடக்குகிறது. அமெரிக்க அழுத்தத்திற்குச் சிக்காமல், திருப்பூர் பின்னலாடைத் தொழிலை பாதுகாக்கும் வகையில் உடனடி வரிச்சலுகை மற்றும் நிவாரண உதவிகளை போர் கால அடிப்படையில் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.
அமெரிக்க வரி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்காக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எப்போதும் குரலாக இருந்து போராடும்.
இக்கூட்டு அறிக்கையை திமுகவின் துரைமுருகன், திராவிடர் கழகத்தின் கி.வீரமணி, காங்கிரஸின் கு.செல்வபெருந்தகை, மதிமுகவின் வைகோ, மார்க்சிஸ்டின் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஐ.யூ.எம்.எல்-ன் கே.எம்.காதர்மொய்தீன், மமக-வின் ஜவாஹிருல்லா, மநீம-வின் அருணாசலம், தவாக-வின் தி.வேல்முருகன், கொமதேக-வின் ஈஸ்வரன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்?