‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மனுக்கள் குப்பையில் தள்ளப்பட்டதா? – தமாகா கண்டனம்

பொதுமக்கள் அளித்த மனுக்கள் ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் யுவராஜா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த ஜூலை 15 அன்று, “உங்களுடன் ஸ்டாலின்” எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். நகர்ப்புறம், கிராமப்புறம் என மாநிலம் முழுவதும் முகாம்கள் நடத்தி மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை ஆய்வு செய்து, உரிய பயனாளிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், அதிகபட்சம் 45 நாளுக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்திருந்தது.

இதுவரை நடைபெற்ற முகாம்களில் லட்சக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், முகாம்கள் முழுவதும் ஆளும் கட்சியினரால் ஆக்கிரமிக்கப்பட்டதால், வேறு கட்சியினருக்கும் சாதாரண மக்களுக்கும் மனுக்கள் கொடுக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் கூட அமைதியாக இருந்து எந்த விளக்கமும் தராமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாம்களில் பொதுமக்கள் அளித்த மனுக்கள், அதிகாரிகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, வைகை ஆற்றில் எறியப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாக இருந்த நிலையில், மனுக்கள் நேரடியாக குப்பையில் போடப்பட்டிருப்பது, மக்களை அவமதிப்பதாகும். தமிழகத்தில் நீதி, சமத்துவம் குறித்து பெருமை பேசப்படும் நிலையில், மக்களின் புகார்கள் இவ்வாறு புறக்கணிக்கப்படுவது கவலைக்குரியது. மக்கள் பிரதிநிதிகள் உண்மையில் மக்களுக்காக உழைக்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

ஆளும் திமுக அரசிற்கு இது புதிதல்ல. பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை, போதைப்பொருள் பரவல், விலைவாசி ஏற்றம் என மக்கள் வாழ்வை சிரமப்படுத்தும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலையில், இப்போது மனுக்கள் கையிலே வந்ததும் ஆற்றில் வீசப்பட்டிருப்பது, மக்களின் நம்பிக்கையை முற்றிலும் சிதைக்கும் செயலாகும்.

“சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்” என்று தொடர்ந்து கூறி வந்த திமுக, 2021-ல் ஆட்சிக்கு வந்தபோது கொடுத்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இப்போது “உங்களுடன் ஸ்டாலின்” எனும் புதிய பெயரில் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது. மக்களின் மனுக்கள் முதல்வரிடம் சென்று சேரும் என்ற நம்பிக்கையோடு அளிக்கப்பட்ட நிலையில், அவை ஆற்றில் தள்ளப்படுவது, பொதுமக்களை ஏமாற்றும் சதி என மக்கள் உணர்ந்துவிட்டனர்.

எனவே, இனிமேலும் பொய்யான பிரச்சாரங்கள் மூலம் மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று, முதல்வர் ஸ்டாலினை நான் வலியுறுத்துகிறேன்,” என யுவராஜா தெரிவித்துள்ளார்

Facebook Comments Box