“உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பொதுமக்கள் மனுக்களை காகிதமாக பார்க்காதீர்கள்…” – அதிகாரிகளுக்கு உதயநிதி அறிவுரை

“உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை காகிதமாகப் பார்த்து முடிவெடுக்காதீர்கள்; அவர்களின் வாழ்க்கை, அனுபவம் எனவே பாருங்கள்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் தீர்வு செய்யப்பட்ட மற்றும் நிலுவை மனுக்கள், மகளிர் உரிமைத் தொகை மனுக்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட துறை உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வழியாக துணை முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியது:

“உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களிடையே மிக அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை தமிழகத்தின் அனைத்து முகாம்களிலும் சுமார் 11.50 லட்சம் மனுக்கள் வந்துள்ளன. முக்கியமாக மகளிர் உரிமைத் தொகை மனுக்கள் மட்டும் சுமார் 17 லட்சம் வரையிலானவை.

மனுக்களை வெறும் காகிதமாகக் கணக்கிடாமல், பொதுமக்களின் வாழ்க்கை, தனிமனிதன் எனவே பாருங்கள். நம்முடைய அரசை நம்பி மனுக்களை சமர்ப்பித்த மக்கள் கோரிக்கைகளை விரைவில் தீர்வு செய்ய வேண்டும். இதுபோன்ற மனுக்களை சாதாரண குறைதீர்ப்பு நாள் மனுக்கள் அல்லது சாதாரண மனுக்கள் போல கருதக்கூடாது. ஒவ்வொரு மனுவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். குறிப்பாக தீர்வு காண இயலாத மனுக்கள் குறித்த காரணங்களை மக்கள் தெரிந்துகொள்ளும்படி அலுவலர்கள் முறையாக விளக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலர் நா.முருகானந்தம், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலர் பிரதீப் யாதவ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயர் பெ.அமுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வைகை ஆற்றில் மிதந்த மனுக்கள்:

முன்னதாக, திருப்புவனம் வட்டத்தின் திருப்புவனம் பேரூராட்சி, பூவந்தி, கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை, மடப்புரம் கிராமங்களில் நடைபெற்ற முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் மனுக்கள் அளித்திருந்தனர். இன்று காலை திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மிதந்தன.

அப்பகுதி உள்ள கார்த்திக் வருவாய் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் அந்த மனுக்களை மீட்டனர். இம்மனுக்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் கையெழுத்திட்ட அசல் மனுக்கள் ஆக இருந்தன. திருப்புவனம் போலீசார் இதை விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி கூறியதாவது:

“ஆற்றில் மனுக்கள் மிதந்தது குறித்து கோட்டாட்சியர் விஜயகுமார் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்பட்ட 6 பட்டா மாறுதல் மனுக்களின் நகல்கள் உள்ளன. அவை ஏற்கனவே தீர்வு பெற்றவை. அதோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து 7 மனுக்களின் நகல்களும் இருந்தன.

ஆற்றில் மனுக்கள் வீசப்பட்ட சம்பவம் குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோட்டாட்சியர் மனு அளித்துள்ளார். சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

தீர்வு பெறுவேன் என எதிர்பார்த்து பல மணி நேரம் காத்திருந்து அளித்த மனுக்கள் ஆற்றில் மிதந்தது பொதுமக்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இதன்பற்றி பல கட்சித் தலைவர்களும் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Facebook Comments Box