‘உங்களுடன் ஸ்டாலின்’ ஊரை ஏமாற்றும் திட்டம்: அன்புமணி விமர்சனம்

“வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மனுக்கள் வீசப்பட்டுள்ளன. வீண் விளம்பரத்துக்காக செயல்படும் திமுக அரசிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

“சிவகங்கை மாவட்டத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெற்ற கோரிக்கை மனுக்கள் அனைத்தும் வைகை ஆற்றில் வீசப்பட்டுள்ளதைப் பார்த்து அதிர்ச்சி ஏற்பட்டது. மக்கள் அரசை நம்பி சமர்ப்பித்த கோரிக்கைகளை திமுக அரசு எந்த அளவு மரியாதையுடன் கையாளுகிறது என்பதை இதே நிகழ்வு சான்றளிக்கிறது.

ஒன்றரை மாதங்களுக்கு முன்பே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கும்போது, இது ஊரை ஏமாற்றும் திட்டம் என்றும், மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது என்றும் நான் ஏற்கனவே கூறியிருந்தேன். முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டதால், முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருப்பது உறுதியாகி உள்ளது.

ஆட்சிக்கு வந்து 50 மாதங்கள் எதையும் செய்யாமல் இருந்த பிறகு, புதிய திட்டங்களை செயல்படுத்துவதாக திராவிட மாடல் அரசு நாடகம் நடத்துகிறது. இதை மக்கள் நம்ப மாட்டார்கள். மக்களை ஏமாற்ற நினைக்கும் அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் கற்றுவிடுவார்கள் என்பது உறுதி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments Box