பொள்ளாச்சி சாலை பணிக்காக ரூ.32 கோடி மதிப்புள்ள நிலத்தை குடும்பம் தானமாக வழங்கியது

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பல்லடம் மற்றும் உடுமலை சாலைகளை இணைக்கும் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நகராட்சி கடந்த 2009-ல் சில நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி செய்தது. இணைப்பு சாலைக்கு வழியாக செல்லும் இடத்தில் சாந்தா ஜெயராமன் குடும்பத்துக்கு சொந்தமான 80 சென்ட் நிலம் உள்ளது. நகராட்சி அதிகாரிகள் அந்த நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, குடும்பம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் கணேசன் பொறுப்பேற்ற பிறகு, சாந்தா ஜெயராமன் குடும்பத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதன் முடிவில், நகர மக்களின் நலனுக்காக 66 அடி அகலத்தில் சுமார் 1.5 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்படும் இணைப்பு சாலைக்காக, குடும்பம் தங்கள் நிலத்தை வழங்க ஒப்புக்கொண்டனர்.

இதன் மூலம், ரூ.32 கோடி மதிப்புள்ள 80 சென்ட் நிலத்தை சாந்தா ஜெயராமன் குடும்பம் பொள்ளாச்சி நகராட்சிக்கு தானமாக வழங்கினர். ஏற்கனவே நிலத்துக்கு நகராட்சி விதித்திருந்த ரூ.49 லட்சம் வரியும் குடும்பத்தினர் செலுத்தினர். நிலத்தை வழங்கும் நிகழ்வு இன்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சாந்தா ஜெயராமன் ஆவணங்களை நகராட்சி ஆணையர் கணேசனிடம் ஒப்படைத்தார். நிகழ்வில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் கவுதமன் மற்றும் திமுக பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன் உடனிருந்தனர்.

சாந்தா ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எங்கள் குடும்ப சொத்தாக இருக்கும் 2 ஏக்கர் நிலத்தில் எனது பங்கு மற்றும் மகள்கள் பங்காக இருக்கும் 80 சென்ட் நிலத்தை மக்களின் பயன்பாட்டுக்காக சாலை அமைப்பதற்காக மகிழ்ச்சியுடன் நகராட்சிக்கு தானமாக வழங்குகிறேன். நிலுவையில் இருந்த வழக்கும் வாபஸ் பெறப்படும்” என்றார்.

Facebook Comments Box