தஞ்சாவூரில் காப்பகத்தில் 22 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள ஒரு வீட்டில் பிடிக்கப்பட்ட கண்ணாடி விரியன் பாம்பு, காப்பகத்தில் பாதுகாப்பாக இருந்தபோது 22 குட்டிகளை ஈன்றுள்ளது. பின்னர் அவற்றை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.

சுந்தரம் நகர் 5-வது தெருவில் உள்ள வீடு ஒன்றில் பாம்பு புகுந்ததாக, ஆகஸ்ட் 26-ஆம் தேதி அருங்கானூர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளைக்கு தகவல் வந்தது. அதன்பேரில் காப்பக நிர்வாகிகள் அங்கு சென்று, சுமார் 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை மீட்டு காப்பகத்திற்கு கொண்டு வந்தனர்.

அங்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, அது கர்ப்பமாக இருப்பதும், விரைவில் குட்டிகளை ஈன்றுவிடும் நிலையில் இருப்பதும் தெரியவந்தது. இதனால், காப்பகத்தில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் காலை அந்த பாம்பு 22 தோல் முட்டைகளை விட்டது. சில மணி நேரங்களிலேயே அவற்றில் இருந்து பாம்புக் குட்டிகள் வெளிவந்தன.

இது தொடர்பாக காப்பக நிர்வாகி ஆர். சதீஷ்குமார் கூறியதாவது:

“கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகளை ஈன்றது குறித்து மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவரின் அறிவுறுத்தலின் பேரில், வனச்சரகர் ஜோதிகுமார் வழிகாட்டுதலில், பாம்பும் அதன் குட்டிகளும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், அடர்ந்த வனப்பகுதியில் அவற்றை விட்டனர்” என்றார்.

Facebook Comments Box