வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நடைபெறும் ஆண்டுப் பெருவிழா, நேற்று மாலை கொடியேற்ற நிகழ்வுடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, செப்டம்பர் 8-ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறும் வழக்கம் உள்ளது.

அதன்படி, இவ்வாண்டும் கொடியேற்ற ஊர்வலம் பேராலய முகப்பில் இருந்து ஆரம்பித்து, கடற்கரை சாலை மற்றும் ஆரிய நாட்டுத் தெருவழியாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாட்சியாக இருந்த நிலையில், ஊர்வலம் பேராலயத்தை அடைந்தது.

பின்னர், தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் புனிதப் பிரார்த்தனையுடன் கொடியை ஏற்றினார். தொடர்ந்து திருத்தலக் கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர்வாதம், தமிழில் திருப்பலி நடைபெற்று, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தமிழகம் மட்டுமன்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து ‘ஆவே மரியா’, ‘மாதாவே’ என முழங்கினர். நிகழ்ச்சியின் இறுதியில் வானவேடிக்கை நடைபெற்றது. இவ்விழாவில் பேராலய அதிபர் இருதயராஜ், துணை அதிபர் அற்புதராஜ், மாநில அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செப்டம்பர் 7-ஆம் தேதி வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், கொங்கணி போன்ற பல மொழிகளில், விண்மீன் ஆலயம், மேல் கோயில், கீழ் கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். முக்கிய நிகழ்வான பெரிய தேர் ஊர்வலம் செப்டம்பர் 7-ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது. விழா, செப்டம்பர் 8-ஆம் தேதி மாலை கொடி இறக்கத்துடன் நிறைவடையும்.

Facebook Comments Box