“மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து ஏமாற்றினார்” – ஆடை வடிவமைப்பாளர் புகார்

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகாரில்,

“ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர் என்பது எனக்குத் தெரியாமல் அவருடன் பழகினேன். பின்னர் அவர் தனது மனைவியை சட்டப்படி பிரிவதாக கூறினார். அதன் பின் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள திருவீதி அம்மன் கோயிலில் என்னைத் திருமணம் செய்து கொண்டார்.

கர்ப்பமாகியபோது குழந்தை வேண்டாம் எனக் கூறி கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தினார். நான் மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த இரண்டு மாதமாக தொடர்பு கொள்ள முடியவில்லை. சில நாட்களுக்கு முன்பு சந்தித்தபோது என்னைத் தாக்கியும் விட்டார்.

என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை. அவருடன் வாழ விரும்புகிறேன். எனவே சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஜாய் கிரிசில்டா கூறியுள்ளார்.

சினிமா துறையில் பணியாற்றிய ஜாய் கிரிசில்டா, நடிகர் விஜய்யின் ‘ஜில்லா’, ரவி மோகனின் ‘மிருதன்’, சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார். 2018-இல் காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2023-இல் கணவரிடமிருந்து பிரிந்துவிட்டார்.

Facebook Comments Box