அன்னை வேளாங்கண்ணி ஆலய விழாவை முன்னிட்டு, பெசன்ட் நகர் மற்றும் அடையாறு பகுதிகளில் 4 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய ஆண்டுப் பொன்விழா பெருவிழா, கொடி ஏற்றத்துடன் நேற்று (ஆகஸ்ட் 29) தொடங்கியது. செப்டம்பர் 8 வரை இத்திருவிழா நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கவுள்ளனர். பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் நடைபயணமாக வருகிறார்கள்.
இதனால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில், அடையாறு மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளில் சில மாற்றங்களை போலீஸார் மேற்கொண்டுள்ளனர். கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1, 7, 8 ஆகிய தேதிகளில் போக்குவரத்தில் பின்வரும் மாற்றங்கள் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றங்கள்:
- திரு.வி.க பாலம் – பெசன்ட் அவென்யூ – பெசன்ட் நகர் பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், ஆவின் பூங்கா வழியாக தடைசெய்யப்பட்டு, அதற்கு பதிலாக எல்.பி. சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும்.
- 7-வது அவென்யூ மற்றும் எம்.ஜி. சாலை சந்திப்பிலிருந்து அன்னை வேளாங்கண்ணி ஆலயம் நோக்கி வாகனங்கள் செல்ல முடியாது.
பேருந்து மாற்றங்கள்:
- எம்.எல். பூங்காவிலிருந்து பெசன்ட் அவென்யூ வழியாக பேருந்து நிலையம் நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துகள் தடைசெய்யப்பட்டுள்ளன. அவை எல்.பி. சாலை – சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ – சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலை – எம்.ஜி. சாலை வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தை அடைய வேண்டும்.
- பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து திருவான்மியூர், அடையாறு சிக்னல் நோக்கிச் செல்லும் பேருந்துகள், பெசன்ட் நகர் 1-வது அவென்யூ – சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ – சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலை – எம்.ஜி. சாலை – எல்.பி. சாலை வழியாகத் திருப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு, போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.