தூய்மைப் பணியாளர்களுக்காக போராடிய வழக்கறிஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய இயலாது என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் உறுதியுடன் தெரிவித்தது. இதையடுத்து, போலீஸார் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளதால், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரிக்கலாம் என நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக சட்டக்கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் இணைந்தபோது, போலீஸார் அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், வி. லட்சுமிநாராயணன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “வழக்கறிஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஏன் கைவிடக்கூடாது?” என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், “வழக்கறிஞர்களின் போராட்ட நடவடிக்கையால் அரசு சொத்துகளும், போலீஸாரும், தனிநபர்களும் சேதமடைந்தனர். வழக்குகளை கைவிட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும். மேலும் அவர்கள் ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்டதால், ஆட்கொணர்வு மனுவும் செல்லாது” என்றார்.
இதற்கு நீதிபதிகள், “சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்காக போராடிய வழக்கறிஞர்கள் மீது இவ்வளவு கடுமையாக நடப்பது தேவையா? அரசு மறப்போம், மன்னிப்போம் என்ற மனப்பான்மை கொண்டிருக்கலாமே. போலீஸார்மீதும் குற்றச்சாட்டு இருக்கிறதே” என்று குறிப்பிட்டனர்.
அப்போது அரசு தரப்பில், “மாநகராட்சியில் ஏற்கனவே 11 வார்டுகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடக்கும் போராட்டம் அரசுக்கு எதிரான நோக்கத்துடன் தூண்டப்பட்டதாக தெரிகிறது. போலீஸார் தவறு செய்திருந்தால் அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கலாம்” என தெரிவித்தனர்.
மேலும், இரண்டு பெண் வழக்கறிஞர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதால், அவர்களை நீதிபதிகள் நேரடியாக விசாரித்தனர். இதில் காவல்துறை அதிகாரிகள் அத்துமீறியிருப்பது தெரியவந்ததால், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரிக்கலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
ஆனால், அரசு தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இறுதியில், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.