விதிகளை மீறிய பெட்ரோல் பங்க் வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி – மனுதாரருக்கு அபராதம்

திருவள்ளூர் மாவட்டம் கோலப்பன்சேரியில், உயர் அழுத்த மின் கம்பிகளின் கீழ் விதிகளை மீறி பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டதாகக் கூறி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரகுபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது, அரசு சார்பில், மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை என்று ஆய்வில் தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள், “மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகளுக்காக சில புகைப்படங்களைத் தவிர எந்த ஆதாரமும் இல்லை. புகைப்படங்களை மட்டும் ஆதாரங்களாகக் கொள்ள முடியாது” எனக் குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், முறையான ஆய்வுகள் இல்லாமல் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்து, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக் கூடாது என எச்சரித்தனர்.

இந்த வழக்கு, எந்தச் சட்ட அடிப்படையும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டதால், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்தத் தொகையை புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Facebook Comments Box