திருப்பூரில் பெண் பயணி உயிர் காப்பாற்றிய பெண் காவலர் திவ்யா – பாராட்டு வெள்ளம்

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடந்த அதிரடி சம்பவம் உயிர் பிழைத்த அதிர்ஷ்டக் கதையாக மாறியது.

மன்னார் குடியிலிருந்து கோவை நோக்கி வந்த ரயிலில் இருந்து, சுசீலா (58) என்ற பெண் தனது பேத்தியுடன் இறங்கும் போது, நிலை தடுமாறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்தார். அந்தச் சமயம், 10 வயது பேத்தி ஏற்கனவே நடைமேடையில் பாதுகாப்பாக இறங்கிவிட்டார்.

அதிர்ச்சியூட்டும் அந்த தருணத்தில், அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) பெண் காவலர் திவ்யா வேகமாக ஓடிச்சென்று, சுசீலாவை அமைதியாக படுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து அவருடன் பேசிக் கொண்டே, தலையை தூக்காமல், அசையாமல் இருக்கச் சொன்னார்.

இதற்கிடையில், பயணிகள் சங்கிலி இழுத்ததால் ரயில் நின்றது. உடனடியாக திவ்யா செயல்பட்டு சுசீலாவை பாதுகாப்பாக வெளியே தூக்கி மீட்டார்.

துரிதமான செயல் திறனால் பெரிய விபத்தை தவிர்த்த காவலர் திவ்யாவை, போலீஸார், பயணிகள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டினர். தற்போது சுசீலா தனது பேத்தியுடன் நலமாக உள்ளார்

Facebook Comments Box