“திமுக ஆட்சியின் குறைகளை தைரியமாக வெளிப்படுத்துங்கள்” – அதிமுக இளம் பேச்சாளர்களுக்கு பழனிசாமி ஆலோசனை
அதிமுக இளம் பேச்சாளர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, திமுக ஆட்சியின் குறைகளை தைரியமாக சுட்டிக்காட்டுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
அதிமுக மாணவரணி சார்பில் ‘உரிமைக்குரல்’ என்ற பெயரில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட 217 பேச்சாளர்களுக்கு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று சென்னை ராயப்பேட்டையில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்து, பேச்சாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். அவர் பேசியது:
“தேர்தல் நெருங்கிவிட்டது. சரியான நேரத்தில் இளம் பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள். இந்த காலம் மிக முக்கியமானது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினால், எதிர்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
மேடையில் பேசும்போது மிகுந்த கவனம், எச்சரிக்கை, மற்றும் புள்ளிவிவரத்துடன் பேச கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கருத்துகள் வலிமையானதாக இருக்க வேண்டும். இங்கு வருபவர்கள் எந்த அச்சமின்றி பேசுகிறார்கள். கருத்துகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். இது பாராட்டுக்குரியது. இதற்காக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியின் குறைகளை தைரியமாக வெளிப்படுத்துங்கள். நான் உங்களுக்கு முழுமையாக துணை நிற்பேன். தமிழகத்தில் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக தான். பொன் விழா கண்ட கட்சி. நமது படை வலிமையானது, வீரமிக்கது, உறுதிமிக்கது, எதற்கும் அஞ்சாதது. இதெல்லாம் உங்களுக்கு துணை நிற்கும்.
அதிமுக ஆட்சியில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், திமுக ஆட்சியின் குறைகளையும் மக்களிடம் எடுத்துரையுங்கள். இதுவே நமக்கு பெரிய வெற்றியை தரும்.”
நிகழ்ச்சியில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமைநிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி, மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.