திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டி பிரதமருக்கு பழனிசாமி கடிதம்
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டதாவது:
“திருப்பூர் பின்னலாடை மையம் தமிழகத்தின் முக்கிய பொருளாதார மையங்களில் ஒன்றாகும். இங்கு தமிழக மக்கள் மட்டுமின்றி, பிஹார், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற பிற மாநிலங்களிலிருந்து வரும் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள்.
இந்த மையம் இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 60 சதவீத பங்களிப்பை வழங்கி, நாட்டிற்கு முக்கிய அந்நியச் செலாவணியை உருவாக்குகிறது. இருப்பினும், பருத்தி நூல் விலை மாற்றங்கள் மற்றும் உயர் உற்பத்திச் செலவு காரணமாக தொழில் கடுமையான சவால்களை சந்திக்கிறது.
சமீபத்தில் அமெரிக்கா வரியை 25 சதவீதம் விதித்து, பின்னர் 50 சதவீதம் உயர்த்தியதால், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு கடுமையான தாக்கம் ஏற்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் இதனால் நலிவடைந்துள்ளன. மத்திய அரசு பன்முகப்படுத்தப்பட்ட ஏற்றுமதி முயற்சிகளை எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. அதே சமயம் உடனடி நிவாரண நடவடிக்கைகள் அவசியமாக உள்ளன.
கடுமையான கட்டண உயர்வால் ஏற்பட்ட போட்டித்தன்மை இழப்பை ஈடுபடுத்த, நிவாரணத் தொகைகள் அல்லது ஏற்றுமதி ஊக்கத்தொகைகள் வழங்கப்பட வேண்டும். உற்பத்திச் செலவை குறைக்க பருத்தி நூலின் வரி விகிதங்களில் சலுகை அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம் இந்திய பின்னலாடை சர்வதேச சந்தையில் போட்டிக்குத் தயார் இருக்கும்.
குறைந்த அளவிலான நிறுவனங்கள் சந்திக்கும் நிதிநெருக்கடியை குறைக்க, நிலுவைத் தொகைகளை குறைந்தது 6 மாதங்களுக்கு ஒத்திவைத்து, நிலுவை கடன்களுக்கு வட்டி மீதான நிவாரணத்துடன் கடன் திருப்பிச் செலுத்தும் முறைகளை மறுசீரமைக்க வங்கிகளுக்கு உத்தரவளிக்க வேண்டும்” எனக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.