வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மனுக்கள் மிதந்த விவகாரம்: அலுவலகத்திலிருந்து மர்ம நபர்கள் திருடியதாக வழக்கு

திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்த சம்பவத்தில், வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்தில், திருப்புவனம் பேரூராட்சி மற்றும் பூவந்தி, கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை, மடப்புரம் கிராமங்களில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் மனுக்களை சமர்ப்பித்தனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் காலை வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்தன. வருவாய் துறை அதிகாரிகள் அவற்றை மீட்டனர். இது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதற்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டனர்.

மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி உத்தரவின்பேரில் கோட்டாட்சியர் விஜயகுமார் விசாரணை நடத்தினார். அதில், ஆற்றில் மிதந்த மனுக்கள் 6, வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த மனுக்கள் 7 என மொத்தம் 13 மனுக்கள் நகல்களே இருந்தன என்றும், முகாமில் பெறப்பட்ட 6 மனுக்களும் தீர்வு காணப்பட்டவை என்றும் தெரியவந்தது.

இதனிடையே, வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைப் பிரிவில் பராமரிக்கப்பட்ட 13 பட்டா மாறுதல் மனுக்கள் மர்ம நபர்கள் திருடியதாக, வட்டாட்சியர் விஜயகுமார் அளித்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அந்த மனுக்களை யார் திருடியது, ஆற்றுக்குள் யார் வீசியது என்பதைக் போலீஸார் விசாரிக்கின்றனர். அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், அருகிலுள்ள கடைகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், வட்டாட்சியர் விஜயகுமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், வட்டாட்சியர் அலுவலகத்தில் அலட்சியமாக பணியாற்றிய 7 அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரிவித்தார்.

Facebook Comments Box