“மக்கள் நலனை பாதுகாக்கும் ஒரே வழி… அதிமுக ஒற்றுமையாக இயங்க வேண்டும்!” – சசிகலா

தமிழக மக்களின் நலனை பாதுகாக்க ஒன்றுபட்ட அதிமுக மட்டுமே தீர்வாகும் என்று சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

“நாட்டின் அரசியல் கட்சிகள் எல்லாம் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு பிரகாசித்த நம் இயக்கம், இன்று ஏளனத்திற்கு உள்ளாகும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற இரு பெரும் தலைவர்கள் இல்லாத நிலையில், இன்று கட்சி மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது. கட்சியில் இருந்து விலகியோ, விலக்கப்பட்டோ உள்ளவர்கள் கூட ஒன்று சேர்ந்து எதிரியை தோற்கடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நம் மனக்கசப்புகளை மறந்து, கருத்து முரண்பாடுகளை கடந்து, கட்சியின் நலன், எதிர்காலம், வெற்றி ஆகியவற்றையே முதன்மையாகக் கருத வேண்டும். அந்த வெற்றி, வரவிருக்கும் தேர்தலில் திமுக என்னும் தீய சக்தியை வீழ்த்துவதாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய முக்கியமான தருணம் இது.

திமுகவை ஆட்சியிலிருந்தும் அரசியல் களத்திலிருந்தும் நீக்க வேண்டும் என்ற இலக்கில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் போராடினர். ஆகவே, திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையை நாமே ஏற்படுத்தக்கூடாது.

எனக்கு நம் கட்சியினரிடம் எந்தவித கோபமோ, வருத்தமோ இல்லை. உங்களுடன் இணைந்து, உங்களின் சகோதரியாக இருந்து கட்சிப் பணியாற்ற விரும்புகிறேன். தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் கட்சியை இப்படியே பார்­த்துக் கொண்டிருக்கிறோம் என்றால், அது நம் இரு தலைவர்களுக்கே மிகப்பெரிய துரோகம் ஆகிவிடும்.

அதேபோல், அது தமிழக மக்களுக்கே மிகப்பெரிய அநீதி ஆகும். எனவே, தமிழக மக்களின் நலனை பாதுகாக்க வலிமையான, ஒற்றுமையான அதிமுக மட்டுமே ஒரே தீர்வு. இதைத்தான் அனைவரும் விரும்புகிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box