பரமக்குடி அருகே கார்-மினி லாரி மோதிய விபத்து – 4 பேர் பலி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நென்மேனியில், கார் மற்றும் மினி லாரி நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராமநாதபுரம் செட்டியார் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் (65), அவரது மனைவி ஜமுனா (55), உறவினர்கள் ரூபினி (30), சரண்ராஜ் (30) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குற்றாலம் நோக்கி காரில் பயணம் செய்தனர். காரை மணக்குடியைச் சேர்ந்த காளீஸ்வரன் (28) ஓட்டி வந்தார்.
மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 2 மணியளவில், அவர்கள் சென்ற கார், மதுரையிலிருந்து வீட்டு பொருட்களுடன் ராமநாதபுரம் நோக்கி வந்த மினி லாரியுடன் மோதியது. இதில், ஜமுனா, ரூபினி, டிரைவர் காளீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோவிந்தராஜ் மற்றும் சரண்ராஜ் ஆகியோர் முதலில் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் மதுரைக்கு மாற்றப்பட்டனர். அதில், கோவிந்தராஜ் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
மினி லாரியில் இருந்த ஓட்டுநர் முத்துராஜா (23), நாகநாதன் (47), ஜெயமாலா (44) ஆகியோர் காயமடைந்து மதுரைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக பரமக்குடி தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.