சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பு – புழல் ஏரி நிறைவுத்திறனை நெருங்குகிறது
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுக்கு, சமீபத்திய மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென்னிந்தியப் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு காற்றுச் சுழற்சி காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. இதில் செங்குன்றம், தாமரைப்பாக்கம், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, சோழவரம், பொன்னேரி, பூந்தமல்லி, திருவாலங்காடு, திருவள்ளூர், ஆவடி பகுதிகளில் மிதமான மழை பதிவானது. திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பூண்டி, ஜமீன் கொரட்டூர் பகுதிகளில் லேசான மழை பெய்தது.
இந்த மழையால், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னைக்கான குடிநீர் ஆதாரமான புழல், பூண்டி, சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்றைய காலை நிலவரப்படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 595 கனஅடி, பூண்டி ஏரிக்கு 360 கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு 225 கனஅடி, சோழவரம் ஏரிக்கு 30 கனஅடி நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மேலும், பூண்டி ஏரியிலிருந்து இணைப்பு கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு விநாடிக்கு 135 கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு 250 கனஅடி, ஆந்திர மாநிலத்திலுள்ள கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி ஏரிக்கு 420 கனஅடி நீர் வரத்து ஏற்பட்டு வருகிறது.
நீர்வளத்துறை தகவலின்படி, 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 3,058 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 2,455 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1,075 மில்லியன் கனஅடி, 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 172 மில்லியன் கனஅடி நீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.