தமிழகத்தில் நாளை முதல் செப்டம்பர் 6 வரை மழை வாய்ப்பு
தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 1) முதல் 6ம் தேதி வரை சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
“தமிழகத்தை நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் ஏற்படும் வேக மாற்றத்தால், நாளை (செப்.1) மாநிலத்தின் சில இடங்களில் லேசானது முதல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேசமயம் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்றும் வீசக்கூடும்.
செப்டம்பர் 2 முதல் 6ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், வட தமிழக கடல் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு கடல் பிரதேசங்கள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில், நாளை மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய (ஆகஸ்ட் 31) காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைப் பதிவுகள்:
- சென்னை மணலி – 27 செ.மீ.
- மணலி புது நகர் – 26 செ.மீ.
- விம்கோ நகர் – 23 செ.மீ.
- கொரட்டூர் – 16 செ.மீ.
- எண்ணூர், கத்திவாக்கம் – தலா 14 செ.மீ.
- திருவொற்றியூர், அயப்பாக்கம் – தலா 12 செ.மீ.
- அம்பத்தூர், பாரிமுனை, நெற்குன்றம் – தலா 11 செ.மீ.
- தண்டையார்பேட்டை, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி, கொளத்தூர், அயனாவரம் – தலா 10 செ.மீ.” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.