சென்னையின் 2 குப்பை மேடுகளில் இருந்து 43.33 லட்சம் மெட்ரிக் டன் கழிவு அகற்றம்
சென்னை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் இதுவரை மொத்தம் 43.33 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் பயோமைனிங் முறையில் அகழ்ந்து அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்ட அறிக்கையில், “பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் திட்டமிட்டவாறு நடைமுறையில் உள்ளன. சராசரியாக ஒவ்வொரு நாளும் சுமார் 6,300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்படுகின்றன. 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள மாநகரப் பகுதியில் சுமார் ஒரு கோடி மக்கள் வசித்து வருகின்றனர்.
முதல்வரின் அறிவுரையின் பேரில் சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், பாலங்கள், பேருந்து நிறுத்தங்கள், மயானங்கள் போன்ற பொது இடங்களில் சுத்தம் செய்யும் பணிகள், கட்டிட மற்றும் கட்டுமான கழிவுகளை அகற்றும் பணிகள் உட்பட நகரை ‘சிங்காரச் சென்னை’ ஆக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மண்டலம் 1–8 வரை உள்ள கொடுங்கையூர் குப்பை மேடும், மண்டலம் 9–15 வரை உள்ள பெருங்குடி குப்பை மேடும் பல வருடங்களாக கழிவு கொட்டும் இடமாக இருந்தன. நகர வளர்ச்சி, மக்கள் அதிகரிப்பு, வணிக வளர்ச்சி ஆகியவற்றால் இவ்விரு இடங்களிலும் கழிவுகள் அளவுக்கு அதிகமாக சேர்ந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பயோமைனிங் முறையில் குப்பைகளை பிரித்து நிலத்தை மீட்கும் பணி வேகப்படுத்தப்பட்டது.
பெருங்குடி குப்பை கிடங்கு மொத்தம் 250 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் 225 ஏக்கர் பகுதியே குப்பை கொட்டப்பட்டதாகவும், சுமார் 27.50 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் உள்ளதாகவும் கணக்கிடப்பட்டது. இவற்றை பயோமைனிங் முறையில் அகற்றி நிலத்தை மீட்க ரூ.350.65 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டன. 6 தொகுப்புகளாக ஒப்பந்தம் வழங்கப்பட்டு, 2022 முதல் தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 25.30 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டு, 94.29 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கழிவுகள் இவ்வருட இறுதிக்குள் அகற்றப்படவுள்ளன.
அதேபோல கொடுங்கையூர் குப்பை கிடங்கு 342.91 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் 252 ஏக்கர் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தன. முதல்வர் உத்தரவின் பேரில் ரூ.641 கோடி மதிப்பில் பயோமைனிங் திட்டம் 6 தொகுப்புகளாக ஒப்பந்தம் வழங்கப்பட்டு 2024 முதல் நடைமுறையில் உள்ளது. மொத்தம் 66.52 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளில் இதுவரை 18.03 லட்சம் மெட்ரிக் டன் அகற்றப்பட்டுள்ளது. தொகுப்பு 1 மற்றும் 2 வழியாக 3 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
அந்த நிலப்பரப்பில் ரூ.57 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் அமைத்து, நீர்ப்பாசன வசதியுடன் 1,500 பசுமை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இதன் மூலம் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை மேடுகளில் இருந்து மொத்தம் 43.33 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு, 97.29 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசு குறைந்து, மக்கள் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.