மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வித் திட்ட நிதியை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கோரி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மத்திய அரசு, “சமக்ர சிக்ஷா அபியான்” (SSA) என்ற ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், நேற்று முன்தினம் காலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்ட அரங்கில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
நேற்று இரண்டாம் நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றபோது, இரவு நேரத்தில் திடீரென சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உடல் நலனை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
ஆனால், அவர் அதை ஏற்காமல், இன்றும் மூன்றாவது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து நடத்தினார். இதனால் உடல்நலத்தில் மேலும் சிக்கல் ஏற்படும் அபாயம் காரணமாக, திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், இன்று மதியம் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.