மத்தியில் இழுபறி ஆட்சி அமைந்ததே மாற்றம்: நிதியமைச்சருக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பெருமையாக கூறியது முறியடிக்கப்பட்டு, இறுதியில் இழுபறி சூழலில் ஆட்சி அமைந்ததே மிகப்பெரிய மாற்றம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.
அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர் சேகர்பாபு இன்று (31.08.2025) கொளத்தூர் பூம்புகார் நகரில் உருவாகி வரும் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டிடம், ராஜாஜி நகரில் கட்டப்பட்டு வரும் மூத்த குடிமக்கள் இல்லம் ஆகியவற்றின் பணிகளையும், சூளை அங்காளம்மன் கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு முன்னேற்பாடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்கவும், குடமுழுக்கிற்கு வரும் பக்தர்கள் சுலபமாக தரிசனம் செய்யும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
பின்னர் ஊடகங்களுக்கு பேசிய அமைச்சர் சேகர்பாபு, “முன்னாள் முதல்வர்கள் காமராஜர், பக்தவச்சலம், கருணாநிதி ஆட்சி காலங்களிலும், அதிமுக ஆட்சியிலும் கோயில்களின் சார்பில் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல், முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற பின் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலின் சார்பில் கொளத்தூரில் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இதுவரை எவர்வின் பள்ளி வளாகத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது தனிக் கட்டிடம் உருவாக்கப்படுகிறது.
சோமநாத சுவாமி கோயில் நிலமும், அனாதீன நிலப்பரப்பும் சேர்த்து 5.96 ஏக்கரில் ரூ.25 கோடி செலவில் 22 வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம், அலுவலகங்கள், உணவகம், வாகன நிறுத்தம் போன்ற வசதிகளுடன் கட்டிடம் உருவாக்கப்படுகிறது. இந்தப் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவுபெற்று மாணவர்களுக்கு பயன்பாட்டுக்கு தரப்படும்.
அதேபோல், கொளத்தூர் ராஜாஜி நகரில் ரூ.8.88 கோடி மதிப்பில் 100 மூத்த குடிமக்கள் தங்கக்கூடிய இல்லம் கட்டப்படுகிறது. அறைகள், சமையலறை, மருத்துவ வசதி, நடைபாதை, பூங்கா, யோகா அறை போன்றவை இதில் அமைக்கப்படுகின்றன. இதுவும் டிசம்பரில் பயன்பாட்டிற்கு வரும். பராமரிப்பிற்கான செலவுகளுக்கு சி.எஸ்.ஆர் நிதி மூலம் இதுவரை ரூ.5 கோடி கிடைத்துள்ளது.
மேலும், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சூளை அங்காளம்மன் கோயிலுக்கு கடைசியாக 2009ல் குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது ரூ.3 கோடி செலவில் ராஜகோபுரம், சன்னதி புதுப்பித்தல், தங்க விமானம், கொடி மரம், பக்தர் தங்குமிடம் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன. வரும் செப்டம்பர் 4ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் கூறிய “மாற்றம் விரைவில் தமிழகம் வரும்” என்ற கூற்றுக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும் என்று சொன்னது தோல்வியடைந்து, இழுபறி நிலைமையில் ஆட்சி அமைந்ததே மாற்றம். தற்போது தமிழகத்தில் பாஜகக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒருவரும் சட்டமன்றத்துக்குள் நுழைய முடியாத நிலை உருவாகும். அதுவே உண்மையான மாற்றமாகும்” என்றார்.
இந்த ஆய்வுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் முல்லை, கவெனிதா, முன்னாள் எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.