பொறுப்பு டிஜிபி பதவியில் ஜி. வெங்கடராமன்: சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றார்
தமிழக சட்டம் மற்றும் ஒழுங்கு பொறுப்புக்கான டிஜிபி பதவியை ஜி. வெங்கடராமன் நேற்று ஏற்றுக்கொண்டார். அப்போது, தனது பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்து சங்கர் ஜிவால் விடைபெற்றார்.
இதற்கு முன், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதால், அந்தப் பதவிக்கு ஜி. வெங்கடராமனை நியமித்து தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவு பிறப்பித்திருந்தார். தற்போது, காவல் துறையின் நிர்வாக பிரிவு டிஜிபியாக பணியாற்றி வரும் வெங்கடராமனுக்கு, கூடுதல் பொறுப்பாக சட்டம் ஒழுங்கு பணியும், காவல் துறை தலைமை இயக்குநர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில், நேற்று வெங்கடராமன் சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பை ஏற்றார். அவரிடம் சங்கர் ஜிவால் கோப்புகளை ஒப்படைத்து ஓய்வு பெற்றார். பின்னர், வெங்கடராமன் அரசு ஆவணங்களில் கையொப்பமிட்டு பொறுப்புகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, டிஜிபி சங்கர் ஜிவாலை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. டிஜிபி அலுவலகத்தின் வாசல் வரை வெங்கடராமன் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் இணைந்து அவரை வழியனுப்பினர். அதற்குப் பின், வெங்கடராமன் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில் ஏடிஜிபிக்கள் டேவிட்சன் தேவாசீர்வாதம், சந்தீப் மிட்டல், ஐஜிக்கள் அன்பு, அஸ்ராகார்க் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், டிஜிபி தரவரிசை அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜி. வெங்கடராமன், 1994-ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று காவல்துறையில் சேர்ந்தார். பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும், மதுரை மாநகர சட்டம் ஒழுங்கில் காவல் துணை ஆணையராகவும், மத்திய புலனாய்வுத் துறையிலும் பணியாற்றியுள்ளார்.
அதேபோல், சேலம் சரகத்தில் காவல் துணை தலைவராகவும், குற்றப்பிரிவு புலனாய்வுத் துறையிலும் பணியாற்றியதோடு, காவல் துறை தலைமை அலுவலகத்தில் காவல் தலைவர், கூடுதல் காவல் இயக்குநர் மற்றும் காவல் இயக்குநர் போன்ற பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு காவலர் குடியிருப்பு வாரியத்தின் டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் ஓய்வு பெற்றதால், அந்தப் பதவிக்கு காவல் துறை தலைமையக டிஜிபியாக இருந்த வினித் தேவ் வாங்கடேவை நியமித்து உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.