சென்னையில் முதல்முறையாக மேக வெடிப்பு : பல இடங்களில் கனமழை பொழிந்தது
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏற்பட்ட மேக வெடிப்பின் காரணமாக கனமழை பெய்தது.
கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பகலில் கடும் வெயிலும், இரவில் அதிக புழுக்கமும் நிலவியது. நேற்று முன்தினம் காலை முதலே கடும் வெயில் நீடித்தது. ஆனால் இரவு 11 மணிக்குப் பின் தொடங்கிய லேசான தூறல், விரைவில் கனமழையாக மாறியது. நள்ளிரவு 12 மணிக்குப் பிறகும் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை தொடர்ந்து பெய்தது.
வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:
“ஆகஸ்ட் 30-ம் தேதி இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சென்னையில் 3 இடங்களில் மிக கனமழை, 8 இடங்களில் பலத்த மழை, மேலும் 28 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. இதில் மணலியில் 27 செ.மீ., மணலி புதுநகரில் 26 செ.மீ., விம்கோ நகரில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது. இதற்கு காரணம் மேக வெடிப்பே என்பது உறுதியாகியுள்ளது” என கூறப்பட்டது.
கனமழையால், சென்னை வந்த 4 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பப்பட்டன. மேலும், 23 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை தாமதமானது.
மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம், ஜெர்மனியில் இருந்த முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தகவல் பெற்றார்.
செப்.6 வரை மழை வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மணிக்கு 30–40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பும் உள்ளது.
செப்டம்பர் 2 முதல் 6-ம் தேதி வரை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.