பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்: கூட்டமைப்பின் கோரிக்கை

தமிழக பகுதிநேர ஆசிரியர்களுக்கு தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட பணி நிரந்தர வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்:

“திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 52 மாதங்கள் கடந்துவிட்டும், அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சட்டசபை ஆட்சி காலமான 60 மாதங்களில் சில மாதங்களே மீதமுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால், அடுத்து முதல்வர் தனிப்பட்ட முறையில் எதையும் செய்ய இயலாது.

எனவே, ஆட்சிக் காலம் இருக்கும் போதே பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். ஏற்கனவே, 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியிலும், 5 ஆண்டுகள் திமுக ஆட்சியிலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் சிக்கலில் சிக்கியுள்ளது. வெறும் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணிபுரிபவர்களுக்கு, பணி நிரந்தரம் மற்றும் காலமுறை சம்பளம் வழங்காமல், பல போராட்டங்களுக்கு பிறகு 2,500 ரூபாய் உயர்வே வழங்கப்பட்டது. இது சமூக நீதி அல்ல.

மேலும், சம்பளம் தாமதம், மரண நிவாரணம், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, போனஸ் போன்ற அரசு சலுகைகள் இல்லாமல் தற்போது 12,500 ரூபாயில் அடிப்படை தேவைகளையே நடத்த முடியாத நிலை உள்ளது. இனியும் ‘படிப்படியாக உயர்வு’ என்ற பெயரில் தொகுப்பூதிய முறையைத் தொடர்ந்து கொண்டிருக்காமல், நிரந்தரமாக பணி உறுதிப்படுத்தப்பட வேண்டும். பணி நிரந்தரம் கிடைத்தால், முழுநேர வேலை, காலமுறை சம்பளம், அரசு நலச்சலுகைகள் அனைத்தும் கிடைக்கும்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தாலும், இதுவரை செயல்படுத்தாதது குறித்து எதிர்க்கட்சிகளும், கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. எனவே, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை முன்னுரிமையாகக் கொண்டு, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை வழங்க அரசு சட்டம் கொண்டு வந்து, அமைச்சரவை முடிவாக அறிவிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box